கண்ணண் பாட்டு -கண்ணன் என் தோழன்

 


முன்னுரை:

முப்பெரும் பாடல்கள்' எனப் போற்றப்பெறும் மகாகவியின் பாடல்களில் கண்ணன் பாட்டும் ஒன்று. மற்ற இரண்டும் பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு ஆகியவையாகும். இந்த பாடத்தில் 'கண்ணன் பாட்டின்' சிறப்புக்களைச் சிறிது பார்க்கலாம்.

பண்டைய நாட்களில் மாணிக்கவாசகர், ஆண்டாள் நாச்சியார் முதலானோர் தங்கள் பாடல்களில் இறைவனைத் தலைவனாகவும் மற்ற உயிர்கள் அனைத்தும் தலைவியாகவும் பாவித்துப் பாடல்களை இயற்றினர். இறைவன் ஒருவன். உயிர்கள் பல. அந்த ஒருவனான இறைவனை அடைய உயிர்களெல்லாம் நாயக நாயகி பாவங்களைக் கொண்டு பாடல்கள் வெளிவந்தன. ஆனால் மகாகவி பாரதி அந்தப் பழைமையை தவிர்த்துவிட்டு புதிய பாதை வகுத்தான். இங்கு பாரதி தன்னைத் தலைவனாகவும், இறைவனைத் தன் காதலியாக, காதலனாக, சேவகனாக, அரசனாக, அமைச்சனாக, தோழனாக இப்படிப் பற்பல முறையில் பாவித்துப் பாடியிருக்கிறான். இதுதான் அவனைப் புரட்சிக்கவியாகப் பார்க்க உதவுகிறது.

கண்ணன் பாட்டு என்ற தலைப்பில் பாரதியார் 23 பாடல்களைப் பாடியிருக்கிறார். இவை முறையே, கண்ணனைத் தோழனாக, தாயாக, தந்தையாக, சேவகனாக, அரசனாக, சீடனாக, சற்குருவாக, குழந்தையாக, விளையாட்டுப் பிள்ளையாக, காதலனாக, காந்தனாக, காதலியாக, ஆண்டானாக, குலதெய்வமாக என்று வரிசைப்படுத்தி எழுதியிருக்கிறார். 

              கண்ணன் என் தோழன்

பாடல் : 1

பொன்னவிர் மேனிச் சுபத்திரை மாதைப்

புறங்கொண்டு போவ தற்கே - இனி

என்ன வழியென்று கேட்கில், உபாயம்

இருகணத் தேயுரைப் பான்; - அந்தக்

''கன்னன் வில்லாளர் தலைவனைக் கொன்றிடக்

காணும் வழியொன் றில்லேன் - வந்திங்கு

உன்னை யடைந்தேன்'' என்னில் உபாயம்

ஒருகணத் தேயுரைப் பான்.1

விளக்கம் :

ஒருவனுக்கு அமைந்த உயிர்த்தோழன் அவனுக்கு எந்தெந்த விதங்களிலெல்லாம் உதவி செய்வானோ அங்ஙனமெல்லாம் கண்ணன் தோழனாய் உதவி செய்கிறானாம். அப்படி கண்ணனைத் தோழனாய் அடைந்தவன் அர்ச்சுனனும் ஒருவன்  அல்லவா? அவன் சுபத்திரையை மணம் செய்ய என்ன வழி, அண்ணன் பலராமன் தடையாக இருக்கிறாரே என்று கேட்டதற்கு அவளை சிறையெடுத்துச் செல்ல ஓர் உபாயம் உடனே சொல்லி உதவி புரிகிறான். வில்வித்தையில் அர்ச்சுனனுக்கு நிகரான கர்ணனைப் போரில் எப்படி வெல்வது, அவன் தர்மங்கள் அவனைச் சுற்றி நின்று பாதுகாக்கின்றனவே இதற்கு நீதான் ஓர் உபாயம் சொல்லவேண்டுமென்று அவனைத் தஞ்சமடைந்தால் கண்ணன் ஓர் கணத்தில் அதற்கு வழி சொல்லுகிறான்.

பாடல் : 2

கானகத்தே சுற்று நாளிலும் நெஞ்சிற்

கலக்க மிலாதுசெய் வான்; - பெருஞ்

சேனைத் தலைநின்று போர்செய்யும் போதினில்

தேர்நடத் திக்கொடுப் பான்; - என்றன்

ஊனை வருத்திடு நோய்வரும் போதினில்

உற்ற மருந்துசொல் வான்; - நெஞ்சம்

ஈனக் கவலைக ளெய்திடும் போதில்

இதஞ்சொல்லி மாற்றிடு வான்.2

விளக்கம் :

பாண்டவர்கள் கானகத்தில் சுற்றித் திரிந்த நாட்களிலும், குருக்ஷேத்திர யுத்தத்திலும் உறுதுணையாக நின்று உதவி செய்தவனல்லவா கண்ணன். அர்ச்சுனனுக்கு தேரோட்டியாக அமர்ந்து கீதை உபதேசம் செய்து யுத்தத்தை மட்டுமல்ல வாழ்க்கையையும் வழிநடத்திக் கொடுத்தவன் கண்ணன். உடலுக்கு நோய் வந்தால் உற்ற மருந்து சொல்வான், ஈனக் கவலைகள் நெஞ்சை வாட்டுகின்றபோது அதற்கு இதம் சொல்லி ஆறுதல் கூறுவான். 

பாடல் :3

பிழைக்கும் வழிசொல்ல வேண்டுமென் றாலொர

பேச்சினி லேசொல்லுவான்;

உழைக்கும் வழிவினை யாளும் வழிபயன்

உண்ணும் வழியுரைப் பான்;

அழைக்கும் பொழுதினிற் போக்குச் சொல்லாமல்

அரைநொடிக் குள்வருவான்;

மழைக்குக் குடை, பசிநேரத் துணவென்றன்

வாழ்வினுக் கெங்கள்கண் ணன்.3

விளக்கம் :

அவனை எப்போது அழைத்தாலும் சாக்கு போக்கு சொல்லாமல் அரை நொடிக்குள் வந்து சேர்வான்; மழைபெய்யும்போது குடை போலவும், பசி நேரத்தில் கிடைக்கும் உணவு போலவும், எங்கள் வாழ்வுக்குக் கண்கள் எங்கள் கண்ணன் என்று பார்த்தன் நயந்து சொல்வான்.

பாடல் :4

கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான்; சொல்லுங்

கேலி பொறுத்திடு வான்; - எனை

ஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும்

ஆறுதல் செய்திடுவான்; - என்றன்

நாட்டத்திற் கொண்ட குறிப்பினை இஃதென்று

நான்சொல்லும் முன்னுணர் வான்; - அன்பர்

கூட்டத்தி லேயிந்தக் கண்ணனைப் போலன்பு

கொண்டவர் வேறுள ரோ?4

விளக்கம் :

கேட்ட பொருளை உடனே கொடுப்பான், கேலி செய்தால் பொறுத்துக் கொள்வான், மனம் துவண்டபோது ஆட்டங்கள் ஆடி, பாட்டுக்கள் பாடி துயரம் தீர்ப்பான், மனதில் கொண்ட எண்ணத்தைக் குறிப்பறிந்து புரிந்து கொள்வான், சுற்றிப் பழகும் அன்பர் கூட்டத்தில் இந்த கண்ணனைப் போல ஒரு தோழன் யாருக்குக் கிடைப்பான்.

பாடல் :5

உள்ளத்தி லேகரு வங்கொண்ட போதினில்

ஓங்கி யடித் திடுவான்; - நெஞ்சில்

கள்ளத்தைக் கொண்டொரு வார்த்தைசொன் னாலங்கு

காறி யுமிழ்ந்திடு வான்; - சிறு

பள்ளத்தி லேநெடு நாளழு குங்கெட்ட

பாசியை யெற்றி விடும் - பெரு

வெள்ளத்தைப் போலருள் வார்த்தைகள் சொல்லி

மெலிவு தவிர்த்திடு வான்.5

விளக்கம் :

மனத்தில் கர்வம் தோன்றினாலோ அவன் சொல்லாலும் செயலாலும் நமக்கு ஓங்கி ஒரு அடி கொடுப்பான், நெஞ்சில் கள்ளத்தைத் தேக்கி வஞ்சனை செய்தால் காறி உமிழ்ந்திடுவான்

பாடல் :6

சின்னக் குழந்தைகள் போல்விளை யாடிச்

சிரித்துக் களித்திடு வான்; - நல்ல

வன்ன மகளிர் வசப்பட வேபல

மாயங்கள் சூழ்ந்திடு வான்; - அவன்

சொன்ன படிநட வாவிடி லோமிகத்

தொல்லை யிழைத்திடு வான்; - கண்ணன்

தன்னை யிழந்து விடில், ஐயகோ! பின்

சகத்தினில் வாழ்வதி லேன்.6

விளக்கம் :

சின்னக் குழந்தையைப் போல சிரித்து விளையாடிக் களித்திருப்பான், அவன் சொன்னபடி நடக்கவில்லை யென்றால் அவ்வளவுதான் அவன் தரும் தொல்லைக்கு அளவே இருக்காது. அப்பேற்பட்ட கண்ணனின் நட்பு இல்லையேல் அவ்வளவுதான் இந்த சகத்தினில் (உலகில்) ஏது வாழ்வு?

பாடல் :7

கோபத்தி லேயொரு சொல்லிற் சிரித்துக்

குலுங்கிடச் செய்திடு வான்; - மனஸ்

தாபத்திலே யொன்று செய்து மகிழ்ச்சி

தளிர்த்திடச் செய்திடுவான்; - பெரும்

ஆபத்தி னில்வந்து பக்கத்தி லேநின்று

அதனை விலக்கிடு வான்; - சுடர்த்

தீபத்தி லேவிடும் பூச்சிகள் போல்வருந்

தீமைகள் கொன்றிடு வான்.7

விளக்கம் :

கோபம் தலைக்கேறி முகம் சிவக்க நிற்கும்போது ஏதோவொன்றைச் சொல்லி குலுங்கிச் சிரிக்கச் செய்திடுவான்; ஏதோவொரு மனஸ்தாபம் ஏற்பட்டிருக்கும்போது குறுக்கே புகுந்து ஏதோ சொல்லி மனம் தளிர்க்கச் செய்திடுவான்; பெரும் ஆபத்து நேரிடும் போது பக்கத்தில் நின்று அதனை விலக்கிடுவான்; நமக்கு ஏற்படும் தீமைகளையெல்லாம் விளக்கில் விழும் பூச்சிகளைப் போல விழுந்து அழிந்திடச் செய்திடுவான். 

பாடல் :8

உண்மை தவறி நடப்பவர் தம்மை

உதைத்து நசுக்கிடுவான்; - அருள்

வண்மையி னாலவன் மாத்திரம் பொய்கள்

மலைமலை யாவுரைப் பான்; - நல்ல

பெண்மைக் குணமுடை யான்; - சில நேரத்தில்

பித்தர் குணமுடை யான்; - மிகத்

தண்மைக் குணமுடை யான்; சில நேரம்

தழலின் குணமுடை யான்.8

விளக்கம் :

உண்மை தவறி நடப்பவர்களை அவன் மன்னிக்கமாட்டான்; ஆனால் மற்றவர்கள் நன்மை கருதி அவன் மட்டும் நிறைய பொய்களைச் சொல்லுவான்; பெண்மைக்குரிய இரக்கமும், எதிர்பாராத காரியங்களைச் செய்வதால் பித்தனைப் போலும், பிறருக்கு இதந்தரும் தண்மை குணங்களும் கொண்டவன் தான் என்றாலும் சில நேரங்களில் தழலைப் போல் சுட்டு எரிக்கவும் செய்வான். 

பாடல் :9

கொல்லுங் கொலைக்கஞ்சி டாத மறவர்

குணமிகத் தானுடை யான்; - கண்ணன்

சொல்லு மொழிகள் குழந்தைகள்; போலொரு

சூதறி யாதுசொல் வான்; - என்றும்

நல்லவ ருக்கொரு தீங்கு நண்ணாது

நயமுறக் காத்திடு வான்; - கண்ணன்

அல்லவ ருக்கு விடத்தினில் நோயில்

அழலினி லுங்கொடி யான்.9

விளக்கம் :

சூதுவாதறியாத குழந்தை மனம் கொண்டவன்; நல்லவர்களுக்கு ஒரு தீங்கும் நேராது காப்பவன்; தீயோருக்கு விஷம்போல, நோய்போல, தீயினைப் போல கொடியவனாவான தன்மையுடையவன்

பாடல் :10

காதல் விளைய மயக்கிடும் பாட்டினில்

கண்மகிழ் சித்திரத் தில் - பகை

மோதும் படைத்தொழில் யாவினு மேதிறம்

முற்றிய பண்டிதன் காண்; - உயர்

வேத முணர்ந்த முனிவ ருணர்வினில்

மேவு பரம்பொருள் காண்; - நல்ல

கீதை யுரைத்தெனை இன்புறச் செய்தவன்

கீர்த்திகள் வாழ்த்திடு வேன்.10

விளக்கம் :

அப்பேற்பட்ட குணநலன்களையுடைய இந்த கண்ணன் யார் தெரியுமா? வேதங்களை உணர்ந்து தவத்தில் சிறந்த முனிவர்களின் உணர்வில் இருக்கும் பரம்பொருளே தான் அவன்!  கீதையெனும் அறவுரை தந்த கண்ணனின்  கீர்த்திகளை கூறி வாழ்ந்திடுவோம்...


கருத்துகள்