வெறும் பேச்சு
பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
முன்னுரை:
ஐம்பத்தாறு தேசங்களாகவும் அனேக குறுநிலப் பகுதிகளாகவும் சிதறுண்டு பற்பல மன்னர் குலத்தவர்களால் பரம்பரை பரம்பரையாக ஆட்சி செய்யப்பட்ட நம் நாட்டை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அந்நிய நாட்டவர்களான முகலாயர்களும், பின் ஆங்கிலேயர்களும் அடிமைப்படுத்தி அடக்கி ஒடுக்கி நம் செல்வங்களைக் கொள்ளையிட்டதற்கு முக்கியமான காரணம் நம் நாட்டைத் தொன்று தொட்டு ஆண்ட மன்னர்களிடையேயும் மக்களிடையேயும் ஒற்றுமையில்லா நிலை நிலவியதேயாகும்.
ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணியான சுதந்திரத்தை, தங்கள் இன்னுயிரை ஈந்தும் பெற்றுத்தந்த சுதந்திரத்தை இன்று உள்நாட்டுக் கொள்ளையர்கள் மீண்டும் அந்நிய நாட்டவர்க்கே தவனை முறையில் விற்று வயிறு வளர்க்கும் வெறும் பேச்சு வீரர்களின் முகத்திரையைக் கிழித்து வண்ணமாக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் வெறும் பேச்சு கவிதைக்கு எவ்வாறு அமைகிறது என்பதை கீழ்காணும் கட்டுரை மூலம் காணலாம்.
கடவுள் மேல் குற்றம் என்பான்
தர்மமென்பார் நீதி என்பார்
தரமென்பார் சரித்திரத்துச் சான்று சொல்வார்
தாயன்புப் பெட்டகத்தை சந்தியிலே எறிந்துவிட்டுத்
தன்மான வீரரென்பார் மர்மமாய்ச் சதிபுரிவார்
வாய்பேசா அபலைகளின் வாழ்வுக்கு நஞ்சு வைப்பார்
கர்ம வினையென்பார் பிரம்மன் எழுத்தென்பார்
கடவுள்மேல் குற்றமென்பார்
கர்ம வினையென்பார் பிரம்மன் எழுத்தென்பார்
கடவுள்மேல் குற்றமென்பார்.
எங்கள் வாழ்க்கை நேர்மையானது என்பார். நாங்கள் செய்யும் அத்தனையும் தர்மமென்பார். எந்த செயலிலும் நீதி என்பார் ஞாயம் என்பார். இதிகாச புராணங்கள் காட்டி சரித்திர சான்று சொல்வார். உண்மையுடனும், நேர்மையுடனும் இருப்பேன் என்று கூறி தாய்நாட்டையும், மக்களையும், சந்தியிலே நிற்க விட்டு தன்மான வீரர் என்பார். யாருக்கும் தெரியாமல் பல மர்ம செயல்கள் செய்து (விளை நிலங்கள் அபகரித்தல், சுரண்டுதல்) வாய்பேசா ஏழை எளிய மக்களின் வாழ்விற்கு துன்பம் விளைவிப்பார். அனைத்து செயல்களுக்கும் காரணம் விதி என்பான். படைப்புக் கடவுள் பிரம்மனின் பிழை என்பான். கடவுளே நடந்து அனைத்திற்கும் காரணம் என்று குற்றம் சொல்வான்.
ஒற்றுமையே பலம்
இந்தத்
திண்ணைப் பேச்சு வீரரிடம் - ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி - நாம
ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி.
கபட நாடகம் ஆடி ஊரையும், நாட்டையும் விலைக்கு விற்கும் திண்ணைப் பேச்சு (அரசியல் கட்சி) வீரர்களிடம் நாம் விழிப்புடன் இருக்கணும் அண்ணாச்சி அதற்காக நாம் அனைவரும் ஒன்றாக இருக்கனும் அண்ணாச்சி. ஊழல் பேர்வழிகள் இல்லாத ஒரு நாட்டை நாம் காண வேண்டும். அந்த நாளை நாம் விரைவில் உண்டாக்கும் அண்ணாச்சி.
நல்லோரை போற்றுதல் வேண்டும்
பொதுநலம் பேசும் புண்யவான்களின்
போக்கினில் அனேக வித்தியாசம்
புதுப்புது வகையில் புலம்புவதெல்லாம்
புவியை மயக்கும் வெளிவேஷம் - அந்தப்
பொல்லாத மனிதர் சொல்லாமல் திருந்த
நல்லோரை எல்லோரும் கொண்டாடணும்
பொதுநலம் பேசித் திரிந்த தலைவர்கள், பேச்சாளர் போக்கில் இன்றைக்கு நிறைய வேறுபாடுகளும், வித்தியாசமும் காண முடிகின்றது .ஒருவரை ஒருவர் இகழ்ச்சி புகழாரம் பேசுவது அத்தனையும் புவியை மயக்கும் வெளிவேஷம். கபடநாடகம் பேசித்திரியும் பொல்லாத மனிதர்களை திருத்த வேண்டும் என்றால் நல்லோரை நாம் ஆதரிக்க வேண்டும்.
உழைப்பால் உயர்வோம்
கடவுள் இருப்பதும், இல்லை என்பதும்
கவைக்குதவாத வெறும் பேச்சு
கஞ்சிக் கில்லாதார் கவலை நீங்கவே
கருத வேண்டியதை மறந்தாச்சு - பழங்
கதைகளைப் பேசி காலம் வீணாச்சு
கையாலே முன்னேற்றம் கண்டாகணும்
கடவுள் உண்டு ,கடவுள் இல்லை என்ற கதைக்கு உதவாத வெறும் பேச்சுக்களை பேசி ஒரு வேளை சோற்றுக்கு இல்லாத ஏழை எளிய மக்களின் கவலைகளை நீக்க மறந்து பழங்கதைகளை பேசிய பல காலம் வீணாக்கி விட்டார்கள் . மீண்டும் இதுபோன்ற செயலுக்கு இடம் கொடுக்காமல் இந்த நவீன உலகில் நம் கையாலேயே முன்னேற்றம் கண்டாகனும்.
ஒற்றுமையே பலம்
நாடி தளந்தவங்க ஆடி நடப்பவங்க
நல்லவங்க கெட்டவங்க நம்ப முடியாதவங்க
பாடி கனத்தவங்க தாடி வளர்த்தவங்க
பலபல வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டவங்க
படிப்பவங்க வீடு புடிப்பவங்க
பொடிப்பசங்க பெரும் போக்கிரிங்க - இன்னும்
பொம்பளைங்க ஆம்பளைங்க அத்தனை பேரையும் வச்சு
மாடா இழுக்கிறோம் வேகமா - நம்ம
வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா
வண்டியை உருட்டி வறுமையை வெரட்டி
உண்டாலும் காய்ந்தாலும் ஒண்ணாகணும்
ஊரை ஏய்க்கும் ஊழல்வாதிகளை ஒடுக்க நாம் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் . அதற்காக வயதானவர்கள், நடிகர்கள், நல்லவர்கள், கெட்டவர்கள் ,நம்பமுடியாதவர்கள், தாடி வளர்த்தவர்கள், பல வேலைகள் செய்யக்கூடிய ஊழியர்கள் ,படிப்பவர்கள், வீடு பிடிப்பவர்கள், பொடிப்பசங்க ,போக்கிரி பசங்க, பெண்கள் ,ஆண்கள் என அத்தனைப் பேரும் ஒன்றாக இணைய வேண்டும். நன்றாக உழைத்து வறுமையை விரட்டி உண்டாலும் உணவு இல்லை என்றாலும் அனைவரும் ஒற்றுமையோடு இருந்து இந்த பாரதத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
முடிவுரை
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்கள் இக்கவிதை வரிகள் மூலம் நம் நாட்டில் நிலவக்கூடிய அரசியல் சூழ்நிலை பற்றியும், அப்படிப்பட்ட அரசியல் சூழ்நிலையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை இக் கவிதையின் மூலம் மிக அழகாக கூறியுள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக